மாஸ்க் அணிந்து கொண்டு
பையுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தேன்.தெற்கு பஜார் தெரு முனை திரும்பும் முன்னே, செய்தித்தாளும் கையுமாக திண்ணையில் கதிரேசன் தாத்தா உட்காந்திருப்பதை
பார்த்தேன், தாத்தாவின் பார்வையில் படாமல் கடந்து போவது
சாத்தியமில்லை.ஒரு வணக்கம் மட்டும் சொல்லி விட்டு ஏதாவது சாக்குபோக்கு சொல்லி
வேகமாக போய் விட வேண்டும் என்று முடிவு செய்தேன். மற்ற நேரமென்றால் தாத்தாவிடம்
உட்கார்ந்து ஊர் கதையெல்லாம் பேசலாம். இப்போது அதற்கான நேரமில்லை. செய்திகளை பற்றி
விலாவாரியாக தாத்தாவே பேச்சைத் தொடங்குவார்.சில நேரம் காரசாரமான விவாதத்தில்
முடிந்து, ஓரிரண்டு நாட்கள் முகம் கொடுத்துப் பேசாமல் கூட
தாத்தா இருப்பார்.பிறகு இரண்டு நாள் கழித்து தத்தாவே சமரசமும் செய்வார்.வலிமையான
தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டவர் தாத்தா.யாருக்காகவும் தனது கருத்துக்களை விட்டு
கொடுக்க மாட்டார். பெரும்பாலும் அவரது கருத்துக்கள் நியாயமானதாக இருக்கும்.ஆனாலும்
பொதுவாக அவருடன் விவாதிக்கும் யாரும் அவரது கருத்துக்களுடன் ஒத்துப் போவதில்லை.
அதைப் பற்றி அவர் கவலைப்படுவதுமில்லை.
யோசித்துக் கொண்டே
வரும்போது தாத்தா வீட்டு திண்ணையை நெருங்கினதை நான் கவனிக்கவில்லை. திடீரென்று
தாத்தாவின் கணீர் குரல் கேட்டது,
"என்ன பேரப் பிள்ளை, எந்த கோட்டையை பிடிக்க வேகமா போறீரு?:"
"இல்ல தாத்தா லாக்டவுன் நேரமில்லா, சீக்கிரம் வீட்டுக்கு திரும்பணும்லா"
"அது சரிலே, இந்த
சாத்தான்குளம் செய்தியை படிச்சியா?"
தாத்தா மெதுவாக என்னை விவாதத்துக்கு உள்ளே இழுக்கப்
பார்க்கிறது எனக்கு புரிந்தது.
"ஊர்ல ஆயிரம் நடக்கும். நமக்கென்ன தாத்தா அதைப்
பற்றி, நம்ம வேலையை பார்க்கவே நமக்கு நேரம் பத்தலை"
"ஏலே அதில்லை, நீ அதைப்
பற்றி என்ன நினைக்கிறே"?
"எதைப் பற்றி?"
"ஆதான்லே அந்த போலீசுக்காரங்க அந்த இரண்டு
பேரையும் அடிச்சே கொன்னுட்டான்லா"
"இப்ப அதைப் பற்றியெல்லாம் பேச வேண்டாம்
தாத்தா. ஸ்டேட் பூரா ஒரே களேபரமாக இருக்கு."
"அப்படியில்லலே, ஒனக்கு
அதைப் பற்றி கருத்து ஒண்ணும் இல்லையா?
"இருக்கு".
"அப்பச் சொல்லு"
இப்படித் தான் தாத்தா மெல்ல மெல்ல நம்மை
விவாதத்துக்குள் இழுப்பார்.
"அதான் சொல்றேன்லா, இப்ப அதைப் பற்றி பேச வேண்டாம்."
"சரி வேண்டாம்,
போலீஸ்காரங்க செய்தது சரின்னு நீ நினைக்கிறியா?"
"திரும்பவும் அதைத் தானே பேசுறீங்க?"
"ஏலே அத மட்டும் சொல்லு, சரியா தப்பா?"
இதைச் சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம் என்று நினைத்து
நான் "கண்டிப்பா தப்பு தான்"
என்றேன்.
"எப்படி?"
"கொஞ்சம் கூட மனிதத் தன்மையில்லாம இப்படி
மாட்டடி அடிக்கலாமா, அதற்கு அவங்களுக்கு யார் அதிகாரம்
குடுத்தாங்க?"
"ஏலே ஆதான்லே அவன் வேலை"
"எது ஆளை அடிச்சே கொல்றதா, இது வன்முறையில்லையா?"
"வன்முறை என்பது என்ன?"
இப்படி தாத்தா கேட்ட போது
தான், நான் செஞ்ச தப்பு எனக்குப் புரிந்தது.. வன்முறையை பற்றி
தாத்தா விளக்கம் கொடுக்கத் தொடங்கினார்.பேச்சு நீண்டு கொண்டே
போனது.அப்போது தான் என்க்கு புரிந்தது நான் வசமாக தாத்தாவின் விவாத வலையில்
சிக்கிக் கொண்டேன் என்பது.இனி அவ்வளவு சுலபத்தில் வெளியே வர முடியாது.
"ஏலே வன்முறைன்னு சொல்றேல்லா, அது என்ன?"
"வன்முறைன்னா அடாவடித்தனம்"
"போலீஸ்காரன் சட்டம் ஒழுங்கை காப்பாத்தணும்னா
அடாவடித்தனம் பண்ணனும்"
"இல்லை தாத்தா அடாவடித்தனம் இல்ல, வன்முறைன்னா கொடுஞ்செயல்" .
"கொடுஞ்செயல்னா?"
"கொடுஞ்செயல்னா உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
தாக்குதல்".
பார்த்தீர்களா கொஞ்சம் கொஞ்சமாக என்னை எப்படி
விவாதாத்துக்குள் தாத்தா இழுத்து விட்டார் என்று.
"கொடுஞ்செயல் யார்ல செய்யல?"
"என்ன சொல்ல வரீங்க தாத்தா, கொடுஞ்செயல் செய்றது தப்பில்லைன்னு சொல்றீங்களா?"
"நான் அப்படி சொல்லலை.கொடுஞ்செயல் தான்
வன்முறைன்னா யார் தான் செய்யல?"
"நீங்க செஞ்சிருக்கிறீங்களா?"
"நீ சொல்ற கொடுஞ்செயல் நானும் செஞ்சிருக்கிறேன், பெரும்பாலும் எல்லாரும் செய்திருப்பார்கள்"
"எது அடித்தே கொல்வதா?"
"ஆம்"
"நான் அப்படி செய்ததில்லை"
"ஏலே நாம் எல்லாரும்
வன்முறையில ஈடுபடுறோம். நமக்கு தெரியாமலே செய்றோம். நம்மை விட எளியவர்கள் மீது, நமக்கு சமமான வலிமை இல்லாதவர்கள் மீது, நம்மை
எதிர்க்க முடியாதவர்கள் மீது, எதிர்த்து தாக்க
முடியாவதவர்கள் மீது நாம் அனைவருமே வன்முறையை கட்டவிழ்க்கிறோம். இது உலகம் பூரா பல
நிலைகளில் நடக்கிறது. அதன் தீவிரம் மட்டும் மாறுபடும்.அது சம்பந்தபட்டவரின்
வலிமையை பொறுத்தது, உலகம் முழுதும் இந்தச்
சட்டாம்பிள்ளைத்தனம் நடந்துக் கொண்டுதானிருக்கிறது.வலியவன்
வெட்டியதே வாய்க்கால் என்று நம் ஊரில் சொல்வது இதைத் தான்.Might is Right என்கிறானே, அது மட்டும் என்ன?
"இல்ல தாத்தா, நீங்க
சொல்றத நான் ஏத்துக்க மாட்டேன. நான் என்னளவில் அப்படி எந்த கொடுஞ்செயலும்
செய்ததில்லை"
"நீ யாரையும் கொன்றதில்லை?"
"இல்லை"
" ஒரு கொசு, மூட்டைபூச்சி, கரப்பான் பூச்சி, பல்லி,
எதையும் கொன்றதில்லை?"
"மனிதனும்
கரப்பான் பூச்சியும் ஒன்றா,?"
"ஏன் அதும் ஒரு ஜீவன்
தானே, உயிர் உள்ள ஜீவன் தானே, அதைக்
கொல்வதற்கு உனக்கு யார் அதிகாரம் குடுத்தாங்க?. ஏன் செய்தாய்
தெரியுமா, நான் சொன்ன எதுவும் உன்னை திரும்ப தாக்காது, உன்னை விட வலிமை குறைந்தது. இதுவே ஒரு நாய், பூனை, பாம்பு, குரங்கு, மாடு, யானை, சிங்கம் என்றால் தயங்காமல் செய்வாயா?.
இதே சிந்தனை தான் நாடுகளுக்கு இடையேயும் இருக்கிறது. தான் வலியவன்
என்ற எண்ணத்துடன் எளியவனை தாக்குவது தான் வன்முறை.அதை நீயும் தான்
செய்திருக்கிறாய்.அடாவடித்தனம் செய்து ஒழுங்கை நிலைநாட்டும் ஒரு படைக்கு தனது எல்லை
எது என்று தெரியாமல் பல சமயம் தறிகெட்டு ஓடிவிடுகிறது. அமெரிக்காவில் Geroge Floyd க்கு நடந்ததும் இதே தான்ல.அதைத் தான் நாம்
அராஜகம் வன்முறை என்றெல்லாம் சொல்கிறோம்.நமது அன்றாட வாழ்வில் நாம் அதே தவறைச்
செய்கிறோம்.நம்மை விட எளியவர்கள் மீது ஒரு கரிசனம் காட்டத் தெரிந்தாலே இது போன்ற
தவறுகள் எல்லாம் நடக்காது.அடுத்த முறை ஒரு கரப்பான் பூச்சியை அல்லது ஒரு எறும்பை
காலால் நசுக்க முன சற்று யோசி. இந்த கரிசனத்தை நமது காவலர்களுக்கு சொல்லி கொடுக்க
வேண்டும்".
"இதெல்லாம், புத்தன், இயேசு, வள்ளலார், காந்தி போன்றவர்களால் தான் கடைபிடிக்க முடியும்:"
"வாடிய பயிரை
கணடபோதெல்லாம் வள்ளலார் வாடியது போல, நீயும் ஒரு கரப்பான்
பூச்சியையும் எறும்பையும் பார்த்து வாட வேண்டும், அப்போது
இது சாத்தியமாகும்"
தாத்தா என்ன தான் சொல்றார், சாத்தான்குளம் காவலர்கள் செய்ததை நியாயப்படுத்தவும் இல்லை, அதே நேரம் தொழில் ரீதியாக வன்முறை சிந்தனைக்கு ஆளான காவல்ர்கள் மீது
பச்சாதாபம் கொள்கிறாரா?
"சரி இதற்கு தீர்வு
தான் என்ன தாத்தா?"
"காவலர்களுக்கு
பயிற்சியளிக்க வேண்டும் Sensitise செய்ய வேண்டும்.தான்
வலியவன் என்ற எண்ணம் எல்லா காவலருக்கும் எப்போதும் இருக்க வேண்டும், அப்போது தான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும்.அதே நேரம், தன்னை எதிர்ப்பவர் எளியவர் என்றால், கரிசனமும், கருணையும் ஒரு சேர காவலரிடம் அதிக அளவில் இருக்க வேண்டும்."
தாத்தாவின் வன்முறை
சித்தாந்தம் எனக்கு சரியென்று பட்டாலும், வழக்கம் போல
தாத்தாவிடம் பேசினால் ஏற்படும் குழப்பம் இப்போதும் ஏற்பட்டது.