வியாழன், 2 ஜூலை, 2020

கதிரேசன் தாத்தாவின் வன்முறை சித்தாந்தம்


மாஸ்க் அணிந்து கொண்டு பையுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தேன்.தெற்கு பஜார் தெரு முனை திரும்பும் முன்னே, செய்தித்தாளும் கையுமாக திண்ணையில் கதிரேசன் தாத்தா உட்காந்திருப்பதை பார்த்தேன், தாத்தாவின் பார்வையில் படாமல் கடந்து போவது சாத்தியமில்லை.ஒரு வணக்கம் மட்டும் சொல்லி விட்டு ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வேகமாக போய் விட வேண்டும் என்று முடிவு செய்தேன். மற்ற நேரமென்றால் தாத்தாவிடம் உட்கார்ந்து ஊர் கதையெல்லாம் பேசலாம். இப்போது அதற்கான நேரமில்லை. செய்திகளை பற்றி விலாவாரியாக தாத்தாவே பேச்சைத் தொடங்குவார்.சில நேரம் காரசாரமான விவாதத்தில் முடிந்து, ஓரிரண்டு நாட்கள் முகம் கொடுத்துப் பேசாமல் கூட தாத்தா இருப்பார்.பிறகு இரண்டு நாள் கழித்து தத்தாவே சமரசமும் செய்வார்.வலிமையான தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டவர் தாத்தா.யாருக்காகவும் தனது கருத்துக்களை விட்டு கொடுக்க மாட்டார். பெரும்பாலும் அவரது கருத்துக்கள் நியாயமானதாக இருக்கும்.ஆனாலும் பொதுவாக அவருடன் விவாதிக்கும் யாரும் அவரது கருத்துக்களுடன் ஒத்துப் போவதில்லை. அதைப் பற்றி அவர் கவலைப்படுவதுமில்லை.

யோசித்துக் கொண்டே வரும்போது தாத்தா வீட்டு திண்ணையை நெருங்கினதை நான் கவனிக்கவில்லை. திடீரென்று தாத்தாவின் கணீர் குரல் கேட்டது,

"என்ன பேரப் பிள்ளை, எந்த கோட்டையை பிடிக்க வேகமா போறீரு?:"

"இல்ல தாத்தா லாக்டவுன் நேரமில்லா, சீக்கிரம் வீட்டுக்கு திரும்பணும்லா"

"அது சரிலே, இந்த சாத்தான்குளம் செய்தியை படிச்சியா?"

தாத்தா மெதுவாக என்னை விவாதத்துக்கு உள்ளே இழுக்கப் பார்க்கிறது எனக்கு புரிந்தது.

"ஊர்ல ஆயிரம் நடக்கும். நமக்கென்ன தாத்தா அதைப் பற்றி, நம்ம வேலையை பார்க்கவே நமக்கு நேரம் பத்தலை"

"ஏலே அதில்லை, நீ அதைப் பற்றி என்ன நினைக்கிறே"?

"எதைப் பற்றி?"

"ஆதான்லே அந்த போலீசுக்காரங்க அந்த இரண்டு பேரையும் அடிச்சே கொன்னுட்டான்லா"

"இப்ப அதைப் பற்றியெல்லாம் பேச வேண்டாம் தாத்தா. ஸ்டேட் பூரா ஒரே களேபரமாக இருக்கு."



"அப்படியில்லலே, ஒனக்கு அதைப் பற்றி கருத்து ஒண்ணும் இல்லையா?

"இருக்கு".

"அப்பச் சொல்லு"

இப்படித் தான் தாத்தா மெல்ல மெல்ல நம்மை விவாதத்துக்குள் இழுப்பார்.

"அதான் சொல்றேன்லா, இப்ப அதைப் பற்றி பேச வேண்டாம்."

"சரி வேண்டாம், போலீஸ்காரங்க செய்தது சரின்னு நீ நினைக்கிறியா?"

"திரும்பவும் அதைத் தானே பேசுறீங்க?"

"ஏலே அத மட்டும் சொல்லு, சரியா தப்பா?"

இதைச் சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம் என்று நினைத்து நான் "கண்டிப்பா தப்பு தான்"  என்றேன்.

"எப்படி?"

"கொஞ்சம் கூட மனிதத் தன்மையில்லாம இப்படி மாட்டடி அடிக்கலாமா, அதற்கு அவங்களுக்கு யார் அதிகாரம் குடுத்தாங்க?"

"ஏலே ஆதான்லே அவன் வேலை"

"எது ஆளை அடிச்சே கொல்றதா, இது வன்முறையில்லையா?"

"வன்முறை என்பது என்ன?"

இப்படி தாத்தா கேட்ட போது தான், நான் செஞ்ச தப்பு எனக்குப் புரிந்தது.. வன்முறையை பற்றி தாத்தா விளக்கம் கொடுக்கத் தொடங்கினார்.பேச்சு நீண்டு கொண்டே போனது.அப்போது தான் என்க்கு புரிந்தது நான் வசமாக தாத்தாவின் விவாத வலையில் சிக்கிக் கொண்டேன் என்பது.இனி அவ்வளவு சுலபத்தில் வெளியே வர முடியாது.

"ஏலே வன்முறைன்னு சொல்றேல்லா, அது என்ன?"

"வன்முறைன்னா அடாவடித்தனம்"

"போலீஸ்காரன் சட்டம் ஒழுங்கை காப்பாத்தணும்னா அடாவடித்தனம் பண்ணனும்"
"இல்லை தாத்தா அடாவடித்தனம் இல்ல, வன்முறைன்னா கொடுஞ்செயல்" .

 "கொடுஞ்செயல்னா?"

"கொடுஞ்செயல்னா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தாக்குதல்".

பார்த்தீர்களா கொஞ்சம் கொஞ்சமாக என்னை எப்படி விவாதாத்துக்குள் தாத்தா இழுத்து விட்டார் என்று.

"கொடுஞ்செயல் யார்ல செய்யல?"

"என்ன சொல்ல வரீங்க தாத்தா, கொடுஞ்செயல் செய்றது தப்பில்லைன்னு சொல்றீங்களா?"

"நான் அப்படி சொல்லலை.கொடுஞ்செயல் தான் வன்முறைன்னா யார் தான் செய்யல?"

"நீங்க செஞ்சிருக்கிறீங்களா?"

"நீ சொல்ற கொடுஞ்செயல் நானும் செஞ்சிருக்கிறேன், பெரும்பாலும் எல்லாரும் செய்திருப்பார்கள்"

"எது அடித்தே கொல்வதா?"

"ஆம்"

"நான் அப்படி செய்ததில்லை" 

"ஏலே நாம் எல்லாரும் வன்முறையில ஈடுபடுறோம். நமக்கு தெரியாமலே செய்றோம். நம்மை விட எளியவர்கள் மீது, நமக்கு சமமான வலிமை இல்லாதவர்கள் மீது, நம்மை எதிர்க்க முடியாதவர்கள் மீது, எதிர்த்து தாக்க முடியாவதவர்கள் மீது நாம் அனைவருமே வன்முறையை கட்டவிழ்க்கிறோம். இது உலகம் பூரா பல நிலைகளில் நடக்கிறது. அதன் தீவிரம் மட்டும் மாறுபடும்.அது சம்பந்தபட்டவரின் வலிமையை பொறுத்தது, உலகம் முழுதும் இந்தச் சட்டாம்பிள்ளைத்தனம் நடந்துக்   கொண்டுதானிருக்கிறது.வலியவன் வெட்டியதே வாய்க்கால் என்று நம் ஊரில் சொல்வது இதைத் தான்.Might is Right என்கிறானே, அது மட்டும் என்ன?

"இல்ல தாத்தா, நீங்க சொல்றத நான் ஏத்துக்க மாட்டேன. நான் என்னளவில் அப்படி எந்த கொடுஞ்செயலும் செய்ததில்லை"

"நீ யாரையும் கொன்றதில்லை?"

"இல்லை"

" ஒரு கொசு, மூட்டைபூச்சி, கரப்பான் பூச்சி, பல்லி, எதையும் கொன்றதில்லை?"

"மனிதனும்  கரப்பான் பூச்சியும் ஒன்றா,?"

"ஏன் அதும் ஒரு ஜீவன் தானே, உயிர் உள்ள ஜீவன் தானே, அதைக் கொல்வதற்கு உனக்கு யார் அதிகாரம் குடுத்தாங்க?. ஏன் செய்தாய் தெரியுமா, நான் சொன்ன எதுவும் உன்னை திரும்ப தாக்காது, உன்னை விட வலிமை குறைந்தது. இதுவே ஒரு நாய், பூனை, பாம்பு, குரங்கு, மாடு, யானை, சிங்கம் என்றால் தயங்காமல் செய்வாயா?. இதே சிந்தனை தான் நாடுகளுக்கு இடையேயும் இருக்கிறது. தான் வலியவன் என்ற எண்ணத்துடன் எளியவனை தாக்குவது தான் வன்முறை.அதை நீயும் தான் செய்திருக்கிறாய்.அடாவடித்தனம் செய்து ஒழுங்கை நிலைநாட்டும் ஒரு படைக்கு தனது எல்லை எது என்று தெரியாமல் பல சமயம் தறிகெட்டு ஓடிவிடுகிறது. அமெரிக்காவில் Geroge Floyd க்கு நடந்ததும் இதே தான்ல.அதைத் தான் நாம் அராஜகம் வன்முறை என்றெல்லாம் சொல்கிறோம்.நமது அன்றாட வாழ்வில் நாம் அதே தவறைச் செய்கிறோம்.நம்மை விட எளியவர்கள் மீது ஒரு கரிசனம் காட்டத் தெரிந்தாலே இது போன்ற தவறுகள் எல்லாம் நடக்காது.அடுத்த முறை ஒரு கரப்பான் பூச்சியை அல்லது ஒரு எறும்பை காலால் நசுக்க முன சற்று யோசி. இந்த கரிசனத்தை நமது காவலர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்".

"இதெல்லாம், புத்தன், இயேசு, வள்ளலார், காந்தி போன்றவர்களால் தான் கடைபிடிக்க முடியும்:"

"வாடிய பயிரை கணடபோதெல்லாம் வள்ளலார் வாடியது போல, நீயும் ஒரு கரப்பான் பூச்சியையும் எறும்பையும் பார்த்து வாட வேண்டும், அப்போது இது சாத்தியமாகும்" 

தாத்தா என்ன தான் சொல்றார், சாத்தான்குளம் காவலர்கள் செய்ததை நியாயப்படுத்தவும் இல்லை, அதே நேரம் தொழில் ரீதியாக வன்முறை சிந்தனைக்கு ஆளான காவல்ர்கள் மீது பச்சாதாபம் கொள்கிறாரா?

"சரி இதற்கு தீர்வு தான் என்ன தாத்தா?"

"காவலர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் Sensitise செய்ய வேண்டும்.தான் வலியவன் என்ற எண்ணம் எல்லா காவலருக்கும் எப்போதும் இருக்க வேண்டும், அப்போது தான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும்.அதே நேரம், தன்னை எதிர்ப்பவர் எளியவர் என்றால், கரிசனமும், கருணையும் ஒரு சேர காவலரிடம் அதிக அளவில் இருக்க வேண்டும்."

தாத்தாவின் வன்முறை சித்தாந்தம் எனக்கு சரியென்று பட்டாலும், வழக்கம் போல தாத்தாவிடம் பேசினால் ஏற்படும் குழப்பம் இப்போதும் ஏற்பட்டது.


புதன், 12 மே, 2010

பாஸ்ட் பார்வார்ட் - ஜூஹாவுடன் ஒரு நாள்


Fast Forward-     ஜூஹாவுடன் ஒரு நாள்
(இது ஒரு அறிவியல் புனைகதை (Science Fiction))

சென்னை - 2050

ஜூஹா தனது அலுவலகத்தில் ஒரு திரையின் முன் அமர்ந்து ஏதோ பேசி கொண்டிருக்கிறாள். அவள் பேச பேச திரையில் பல மாற்றங்கள் தெரிகிறது. திடீரென்று திரையில் ஒரு ஆண் உருவம் தெரிகிறது.

"ஜூஹா ! இப்பொழுது நேரம் சரியாக ஐந்து மணி. உங்கள் அலுவலக நேரம் முடிந்து விட்டது " என்று சொல்கிறார்.

உடனே ஜூஹா " Okay, Sign off " என்று சொல்கிறாள்.

திரை தானாகவே அணைந்து விடுகிறது .ஓட்டமும் நடையுமாக வேக வேகமாக ஜூஹா அலுவலக வாயிலுக்கு வருகிறாள்.மூடியிருக்கும் கதவை பார்த்து "ஓபன்" என்று சொல்கிறாள். கதவு திறக்க மறுக்கிறது.

"Error" என்று ஒரு தகவல் கதவில் உள்ள சின்ன திரையில் பளிச்சிடுகிறது.ஜூஹா மீண்டும் ஒரு முறை "ஓபன்" சொல்லி பார்க்கிறாள்.கதவு திறக்கவில்லை.தொண்டை புண் காரணமாக தனது குரல் சற்று மாறி ஒலிப்பது புரிந்ததும் ஜூஹா தனது கண்களை கதவுக்கு பக்கத்தில் வைத்து கண் இமைக்காமல் ஒரு நொடி உற்று நோக்கினாள்.

உடனே திரையில் "Employee code ?" என்று பளிச்சிட்டது. தனது வசம் இருந்த ஒரு சிறு அட்டையை திரை பக்கம் ஜூஹா காட்டினாள்.

மீண்டும் திரையில் "Citizen Code ?" என்று பளிச்சிட்டது.

வேறு ஒரு அட்டையை எடுத்து கதவில் உள்ள திரையில் காட்டினாள்.கதவு உடனே திறந்து வழி விட்டது. இன்னும் பத்து நொடிகள் தான் உள்ளது.அவளுக்கான flying car அலுவலக வாயிலுக்கு வருவதற்கு. சரியான நேரத்திற்கு ஜூஹா அலுவலக வாயிலை அடைந்த உடன் flying car அவள் எதிரே வந்து நின்றது.ஏற்கனவே ஒரு நபர் காரில் அமர்ந்து இருந்தார்.அவருக்கு அலுவலக நேரம் சரியாக 4.55 க்கு முடிந்தது. ஜூஹாவின் வீடு இருக்கும் அதே பகுதியில் வசிக்கும் நபர் அவர்.அலுவலகத்தில் இருந்து சுமார் 450 கி.மீ தள்ளி மதுரை அருகே கள்ளந்திரி என்ற இடத்தில் உள்ளது ஜூஹாவின் வீடு.

காருக்குள் அமர்ந்திருந்த நபரை பார்த்து "ஹை" சொல்லிவிட்டு அமர்ந்தாள் ஜூஹா. நாவிகேட்டர் பேனலை மெதுவாக தொட்டாள்.

" Destination -2 ? " என்றது திரை .

"Select" என்ற பொத்தானை மெதுவாக தொட்டாள் ஜூஹா.திரையில் பல ஊர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு கட்டம் தெரிந்தது. அதில் இருந்து கள்ளந்திரி என்பதை தேர்வு செய்தாள்.

"Kallanthiri - KRI-205007821" என்று திரையில் தெரிந்தது.

"OK" என்ற பச்சை பொத்தனை அழுத்தினாள்.

"Starting Point-Chennai-CHI-2050002001"

"Destination-Kallanthiri-KRI-2050078201"

“OK? “ என்று திரையில் தெரிந்தது. ஒகே என்ற பொத்தானை ஜூஹா அழுத்தினாள்.

“Kallanthiri – Coordinates 9°48′N 78°06′E / 9.8°N 78.10°E “ என்று திரையில் தெரிந்தது.

“Fasten your belts “

“Ready for take off -Confirm “ என்றது திரை மீண்டும் .

மீண்டும் பச்சை பொத்தானை ஜூஹா அழுத்தினாள்.

“Start Time - 05.15 PM “

“Travel Time – 1 hour 30 minutes”

“Expected Landing Time – 06.45 PM “ என்றது திரை.

Flying Car களுக்காவே ஒதுக்கப்பட்டுள்ள ட்ராக்கில் மெதுவாக் நகர தொடங்கியது கார். நொடி பொழுதில் வேகம் எடுத்து சாலையில் 500 மீட்டர் தூரம் சென்ற பின் மெதுவாக மேலே நோக்கி எழும்ப ஆரம்பித்தது. நாவிகேட்டர் திரையில் Longitude,Latitude,Altitude என்று என்னவெல்லாமோ தெரிய ஆரம்பித்தது. இன்னொரு புறம் 1 மணி 30 வினாடிகளில் இருந்து நேரம் குறைந்தது கொண்டே வந்தது.

"உங்கள் குல் எப்படி இருக்கிறாள் ? " என்றாள் ஜூஹா

"ஷீ  இஸ் பைன். தூத்துக்குடியில் இருந்து அப்பா வந்திருக்கிறாங்க "

"ஒ அப்படியா ! குல்லை பிடித்திருக்கிறதா அவருக்கு ? "

"மிகவும் பிடித்திருக்கிறது சென்ற ஆண்டு விபத்தில் அம்மா இறந்த பிறகு அப்பா மிகவும் தளர்ந்து விட்டார். குல் அவருக்கு செய்த பணிவிடைகளை பார்த்து அசந்துவிட்டார்."

" ஒ தாட் இஸ் கிரேட் " என்றாள் ஜூஹா.

"அது சரி நீங்கள் பிம்மை பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே ? " என்றான் அவன்.

"பிம் இஸ் ஆல்சோ பைன். நான்கு மாதங்கள் தானே ஆகிறது.வீட்டுக்கு போன உடன் அவனுடன் விளையாட ஆரம்பித்து விடுவேன்" என்றாள் ஜூஹா.

அலுவலுகம்,அரசியல்,சினிமா என்ற எல்லா விஷயங்களையும் அலசி முடித்த பின்பு நாவிகேட்டரில் "Time elapsed - 1 Hour 20 Minutes " என்று பார்த்த உடனே இன்னும் பத்து வினாடிகளில் வீட்டுக்கு சென்று பிம்முடன் கொஞ்சி விளையாடலாம் என்று ஜூஹா மகிழ்ந்தாள்.

மதுரை வரும் முன்னே flying car மெதுவாக தறை இறங்கி flying car க்கான ட்ராக்கில் நகர தொடங்கியது. Time Elapsed சரியாக ஜீரோ என்று காட்ட தொடங்கியதும் கார் கள்ளந்திரி எல்லையை தொட்டிருந்தது.

கார் ஜூஹாவின் வீட்டு முன்பு நின்றதும் "பை" சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்ல துடித்தாள் ஜூஹா.கதவு அருகில் இருந்தச சின்ன திரையில் தனது வலது கையின் ஐந்து விரல்களையும் நன்றாக விரித்து வைத்தாள்.மூன்று முறை பீப் ஒலி கேட்ட பின்பு திரையில் "Security Code ? " என்று தெரிந்தது. கதவில் வைத்திருந்த keypad இல் பத்து எண்கள் அடங்கிய ஒரு குறியீடை டைப் செய்தாள். உடனே கதவு திறந்து கொண்டது. கதவும் திறந்ததும் " Key pad Locked " என்று கதவில் பளிச்சிட்டது.வீட்டிற்குள் நுழைந்த உடன் சூடா ஜூஹாவை ஹை சொல்லி வரவேற்றான்.

கையில் Ipad சகிதம் அமர்ந்து இருந்த அப்பாவையும் அம்மாவையம் பார்த்து " ஹை" சொல்லிவிட்டு வேகமாக பிம்மை பார்க்க சென்றாள். சூடா ஜூஹாக்கு தேநீர் எடுக்க சமையல் அறையை நோக்கி சென்றான்.ஜூஹாவின் தந்தைக்கு 98 வயதாகிறது. அம்மாவின் வயது 95. இருவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் medical nanobots inject செய்யபட்டு அனைத்து உடல் உபாதைகளில் இருந்து விடுபட்டு 50 வயதுகாரர்களை போல வாழக்கையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். கையில் வைத்திருக்கும் Ipad மூலம் ஜூஹாவின் அப்பா தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கான Menu வை தேர்வு செய்துகொண்டிருக்கிறார்.சுவரில் ஒரு மெல்லிய அகன்ற திரை மாட்டப்பட்டுள்ளது. அந்த திரையில் எந்த நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி சானல்கள் வேண்டும் என்றுகேட்கபடுகிறது. Ipad மூலம் "இந்தியா" என்பதை தேர்வு செய்கிறார். பின்பு என்ன மொழி நிகழ்சிகள் என்று கேட்கபடுகிறது. "தமிழ்"என்பதை தேர்வு செய்கிறார்.தமிழ் நிகழ்சிகளை ஒளிபரப்பும் அனைத்து சானல்களின் பெயர்களும் திரையில் தெரிகிறது. மெர்குரி என்ற சானலை தேர்வு செய்கிறார். உடனே நிகழ்ச்சி பட்டியல் திரையில் தெரிகிறது.அதிலிருந்து அவருக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியான "அறிவியல் முன்னேற்றங்கள் " தேர்வு செய்கிறார். அந்த தலைப்பின் கீழ் வரும் அனைத்து நிகழ்சிகளின் பட்டியல் மீண்டும் திரையில் தோன்றுகிறது. அது ஒரு நீண்ட மூன்று பக்க பட்டியல்.அதிலிருந்து "மோட்டார் மூலம் இயங்கும் நாநோபோட்ஸ்-Motorised Nanobots" என்ற நிகழ்ச்சியை தேர்வு செய்கிறார். உடனே ஒரு மருத்துவர் திரையில் தோன்றி வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை தொடங்குகிறார்.

ஜூஹாவின் அம்மா தனது Ipad இல் தமிழ் பாப் இசை நிகழ்ச்சியை தேர்வு செய்து திரையை இரண்டாக பிரித்து இன்னொரு பகுதியில் தெரிய செய்ததுடன் ஹெட் போன் அணிந்து கொண்டு கணவருக்கு இடைஞ்சல் இல்லாமல் தனக்கு விருப்பப்பட்ட நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினார். 100 inch அகன்ற திரையை இருவரும் சரி சமமாக பிரித்துக்கொண்டு அவர்களுக்கு பிடித்த நிகழ்சிகளை பார்த்து கொண்டிருந்தார்கள்.

ஜூஹா பிம்மிடம் சென்று ஒரு முத்தம் கொடுத்து விட்டு "உடை மாற்றி விட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு செல்கிறாள். குழந்தை ஜூஹாவை பார்த்து ஒரு தெய்வீக சிரிப்பை உதிர்க்கிறது.அதற்குள் சூடா தேனீர் தயார் செய்து கொண்டு ஜூஹாவை தேடி வருகிறான்."ஜூஹா" என்று குரல் கொடுக்கிறான். பதில் இல்லாததால் மீண்டும் ஒரு முறை குரல் கொடுக்கிறான் "எஸ்" என்கிறாள் ஜூஹா.குரல் வந்த திசையை நோக்கி சூடா செல்கிறான்.

உடை மாற்றி கொண்டு வரும் ஜூஹா சூடாவை பார்த்து "Wait" என்கிறாள். சூடா அவள் சொன்னது தான் தாமதம் அந்த இடத்திலயே நின்று விடுகிறான்.பின்பு அவனிடம் சென்று தேநீர் கோப்பையை வாங்கி கொண்டு "தேங்க்ஸ்" என்கிறாள்.தேநீர் அருந்தும் பொழுதே அழகு ததும்பும் பிம்மை பெருமையுடன் பார்க்கிறாள்.குழந்தை மீண்டும் அழகாய் சிரிக்கிறது. பிம்மை எடுத்து கொண்டு அம்மா அப்பா இருக்கும் அறைக்கு வருகிறாள்.தொலைக்காட்சி நிகழ்ச்சியை பிம் உற்று உற்று பார்த்து கண்களை அகல விரிக்கிறான்.அதை பார்த்து ஜூஹா ஆனந்தம் அடைகிறாள்.தாய் தந்தையிடம் பிம்மை காட்டி உவகை அடைகிறாள். இது அவர்கள் வீட்டில் சிறிது காலமாக தினமும் நடக்கும் நிகழ்ச்சி.

இன்னும் சிறிது நேரத்தில் பிம் உறங்கி விடுவான் .அதற்க்கப்புறம் ஜூஹாவின் தாய் தந்தையர் ஜூஹா என்று அனைவரும் உறங்கிவிடுவார்கள். மீண்டும் நாளை காலை இதே போன்ற ஒரு இயந்திரத்தனமான பொழுது ஜூஹாவின் வாழ்க்கையில் விடியும். ஜூஹாவின் வீட்டில் தூங்காத ஒரு ஜென்மம் உண்டு.அது தான் சூடா. சூடா 5 லட்சம் ரூபாய் கொடுத்து ஜூஹா சமீபத்தில் வாங்கிய எந்திரன்(Robot).வீட்டு வேலைகள் செய்வதற்காக வாங்கினாள்.

பின் குறிப்பு :

குல் ஜூஹாவின் நண்பனின் வீட்டில் உள்ள இதே போன்ற எந்திர பெண். குல் இன்னும் சற்று அதிக திறமைகள் உள்ளவள்.அதனால் அவள் விலை ஏறக்குறைய 7 லட்சம் ரூபாய். ஜூஹாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.2045 ஆம் ஆண்டு ஆர்டர் செய்து 2050 ஆம் ஆண்டு டெலிவர் செய்யப்பட்ட Human cloned Designer Baby தான் பிம். ஆனால் பிம் வந்த பின்பு தான் ஜூஹாவின் வாழ்க்கை சற்று  இன்பமயமானது.

புதன், 14 ஜனவரி, 2009

கல்லாதது .......

வீட்டிற்குள் நுழைந்த உடனயே அவன் மனைவியை அழைத்து "இன்னும் சங்கர் வரைலயா? " என்று ஒரு வித பதட்டத்துடன் கேட்டான்.


"வந்துட்டான். டிபன் சாப்பிட்டிட்டு இப்ப தான் ட்யுஷன் போயிருக்கிறான்.என்ன விஷயம்? "


"ஒண்ணுமில்லை ஒழுங்கா ட்யுஷன் போறானான்னு கேட்டேன்"


"அதான் போறானே,பாவம் அவனுக்கு எங்க நேரம் இருக்கிறது? காலையில யோகா வகுப்பு,அப்புறம் கம்ப்யுட்டர் கிளாஸ்,பின்பு பள்ளிக்கு போகணும்,அப்புறம் அங்கிருந்தே நுழைவு தேர்வு கோச்சிங் போகணும்,வந்து ட்யுஷன் போகணும்,வந்த பிறகு டெஸ்ட்டுக்கு படிக்கணும்,ரெக்கார்ட் எழுதணும்.அவனை பார்த்தாலே பாவமா இருக்குது."

இது சிறிது காலமாக அவன் வீட்டில் தினசரி நடக்கும் ஒரு நிகழ்ச்சி.அவனுக்கு தன் மகனை ஒரு பொறியாளனாக பார்க்கணும்னு வெகு ஆசை.அவன் இப்படி தவறாமல் செய்வது அவனது தந்தை முருகையாவுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.இருந்தாலும் அவர் ஒன்றும் சொல்வதில்லை.பெரும்பாலும் ஈசி சேரில் சாய்ந்து ஏதாவது ஒரு புஸ்தகம் படித்து கொண்டிருப்பார்.Sardar Vallabai Patel's Letters என்ற ஆங்கில புஸ்தகத்தை படித்து கொண்டிருந்தார்.என்ன புஸ்தகம் வேண்டுமென்று அவர் மகனிடம் சொல்லிவிடுவார்.அலுவலகத்தில் இருந்து வரும்போது பொது நூலகத்தில் இருந்து எடுத்து வந்து அவன் தான் தந்தைக்கு வழங்குவது வழக்கம்.புஸ்தகத்தில் கவனம் இருந்தாலும் கணவன் மனைவிக்குள் நடந்த இந்த உரையாடலை அவர் கவனிக்க தவறவில்லை.அவரும் ஒரு காலத்தில் தன் மகனை ஒரு டாக்டர் ஆக பார்க்க ஆசைப்பட்டார்.மகனிடமும் அதை தெரிவித்திருந்தார்.ஆனால் அவன் ஒரு சராசரி மாணவனாக இருந்த காரணத்தினால் அந்த ஆசை நிறைவேறவில்லை.தவிர அவர் மகனை இது போல் இம்சித்ததில்லை.ஓன்று அல்லது இரண்டு முறை தெரிவித்திருப்பார்.அவ்வளவு தான்.முருகையாவின் மனைவி கோமதி அம்மாள் இது போன்ற விஷயங்கள் எதிலும் தலையிடுவதே இல்லை.அவங்களுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும்.அவனுக்கு என்று தனி விருப்பு வெறுப்பு என்று ஏதும் இல்லாத வயதில் அவன் தனது பட்ட படிப்புக்கு விலங்கியல் பாடத்தை தேர்வு செய்தான்.மருத்துவ படிப்பு இல்லை என்று ஆகிவிட்ட நிலையில் முருகையாவும் அதை பெரிதாக நினைக்கவில்லை.விலங்கியல் படித்துவிட்டு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு பஞ்சாலையில் அவன் வேலைக்கு சேர்ந்தது வேறு விஷயம்.அவனது மனைவிக்கும் மகனை பொறியாளராக பார்க்க அசை தான்.இருந்தாலும் மகன் படும் கஷ்டங்களை பார்த்து அவப்போது மனம் இரங்கி வருத்தப்படுவாள்.வீட்டிற்கு வரும் நண்பர்கள்,உறவினர்கள் எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் சங்கருக்கு இலவச உபதேசங்கள் வேறு செய்வார்கள்.இதை எல்லாம் பார்க்கும் முருகையா ஏதோ சொல்ல முற்படுவார்.ஆனால் தன்னை கட்டுப்படுத்தி கொள்வார்.இது போக சங்கர் வயதுள்ள உறவினர் வீட்டு பிள்ளைகள் எல்லாம் என்ன படிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பது பற்றி வேறு விவாதம் நடக்கும்.அதிலும் முருகையா கலந்து கொள்ள மாட்டார்.

கோமதி அம்மாளின் அண்ணன் மகனும் மனைவியும் ஒரு நாள் அவன் வீட்டிற்கு ஒரு ஞாயிறு அன்று வந்திருந்தார்கள்.வழக்கம் போல பேச்சு பிள்ளைகளின் படிப்பு பற்றி சென்றது.அவர்களுக்கு சங்கர் வயதில் ஒரு மகன் உண்டு.கோமதி அம்மாள்,மருமகனிடம் "உன் மகன் மேற்கொண்டு என்ன படிக்க போறான்?"

"இன்னும் ஒன்னும் முடிவு செய்யவில்லை.எனக்கு அவன் Hospitality Management படிக்கணும்னு ஆசை."

அங்கும் இதே கதை தானா என்பது போல் முருகையா அவனை பார்த்தார்."Why don't you let them choose their career?" முருகையா இப்படி கூறியதும் அவன் அப்பாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்.ஆனால் அவனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.பேரனை இஞ்சினியரிங் படிப்பதற்கு அவன் வற்புறுத்துவது அப்பாவுக்கு பிடிக்கவில்லை என்பது முதன் முதலாக அவனுக்கு புரிந்தது.

"இல்லை மாமா. அந்த காலத்தில் எங்களுக்கு யாரும் career guidance குடுக்கவில்லை,.இன்று அப்படி இல்லை.நிறைய புது படிப்புகள் வந்துள்ளது.அதில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள துறையை தேர்ந்தெடுத்து படித்தால் அவர்களின் எதிர்காலம் நல்லா இருக்கும்." இதற்கும் ஏதோ சொல்ல நினைத்த முருகையா தன்னை கட்டுப்படுத்தியது தெரிந்தது.

"அது என்ன ஹாச்பட்டில் சம்பந்தப்பட்ட படிப்பா?" கோமதி அம்மாள் கேட்டாள்.

" இல்லை அத்தை.! Hospitality, பெரிய ஸ்டார்  ஹோட்டல் சம்பந்தப்பட்ட படிப்பு."

"அப்படியா எங்க வீட்டில பேரன் இன்ஜினீயர் ஆகணம்னு அவன் அப்பா தினமும் அவனிடம் சொல்லி கொண்டிருப்பான்"

அவர்கள் சென்ற பிறகு அவனிடம் மனைவி கேட்டாள் "ஏங்க அவரு சொன்ன படிப்புக்கு ரெம்ப செலவாகுமா?"

"அதை பற்றி நமக்கென்ன ? சங்கர் இன்ஜினீயரிங் தான் படிக்கணும் " அவன் தீர்மானமாக சொன்னான்

அடுத்த நாள் அவன் ஆபீஸில் இருந்து வந்த உடன் "சங்கர் எங்கே ? "என்று கேட்டான்.

"இப்ப வந்திடுவான்.இன்று ட்யுஷன் கிடையாது.நண்பன் வீட்டிற்கு போயிருக்கான்."

"இன்ஜிநீயரிங்கில் மவுசு உள்ள பிரிவு எது என்று விசாரித்து லிஸ்ட் கொண்டு வந்திருக்கிறேன்.அவனிடம் இது பற்றி பேசவேண்டும்."

சற்று நேரத்தில் சங்கர் வருகிறான்.சங்கர் உள்ளே நுழைந்த உடனயே "சங்கர் இங்க வா.நீ வழக்கமான இன்ஜினியரிங் பிரிவு எதையும் படிக்க வேண்டாம்.கம்ப்யுட்டர் பிரிவு நீ படித்து முடிக்கும் பொது saturate ஆயிடும்.மவுசு அதிகம் உள்ள பிரிவுகள் லிஸ்ட் தான் இது.இதுல உனக்கு எந்த பிரிவு சரியாக இருக்கும்னு நான் குறித்து கொண்டு வந்திருக்கிறேன்."

இதை கேட்ட உடனயே முருகையா ஈசி சேரில் இருந்தபடியே மகனை உற்று பார்த்தார்.பின்பு மகன் பேசுவதை செவி மடுத்து கேட்க தொடங்கினார்.அவன் கையில் வைத்திருந்த லிஸ்டில் சிலது மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்யபட்டிருந்தது.அவையெல்லாம் மகனுக்காக வேண்டி அவன் தேர்வு செய்திருந்த பிரிவுகள்.

"வழக்கமான பிரிவுகள் இல்லாமல் 12 பிரிவுகள் எழுதி கொண்டு வந்திருக்கிறேன்.இதில் Aerospace Engineering and Bio medial Engineering என்று இரண்டு இன்ஜினீயரிங் பிரிவும் Integrated Msc in Atomic Energy என்ற PG பிரிவும் நான்  தேர்வு செய்திருக்கிறேன்.கடைசியா சொன்னது இன்ஜினீயரிங் இல்லை என்றாலும் மதிப்பிலும் வேலை வாய்ப்பிலும் அதற்கு இணையானது.இதில் எது படிக்கிறாய்?"

ஒரு சின்ன குழந்தையின் ஆர்வத்துடன் அவன் சங்கரிடம் கேட்டான்.சங்கர் ஒரு வகை மிரட்சியுடன் அப்பா முகத்தை பார்த்து கொண்டிருந்தான்.இதில் ஏதும் பிடிக்கவில்லை என்று சொன்னால் அப்பா என்ன சொல்வாரோ என்று ஒரு வித பயம்.

"உன்கிட்ட தான் கேட்கிறேன்.என்ன படிக்கிறே?" சங்கரால் ஏதும் பேசமுடியவில்லை.
"வாய் திறந்து ஏதாவது சொல்லேன்"

"இப்பவே அவனை இதெல்லாம் கேட்டால் அவன் என்ன சொல்வான்.அவனுக்கு என்ன தெரியும்.எது நல்லதோ அதை நீங்களே முடிவு செய்யுங்கள்." சங்கரின் அம்மா மகனுக்காக பரிந்து பேசினாள்.

"அப்படியில்லை.இந்த மூன்று பிரிவில ஒரு பிரிவை சொல்ல முடியாதா?"

பேசமுடியாமல் சங்கர் விக்கித்து நின்றான்.இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த முருகையா மகனை பார்த்து " ஒரு நிமிஷம் இரு.இப்ப எதற்கு அவனை ஏதாவது பதில் சொல்ல கட்டாய படுத்துறே? முதல்ல உனக்கு ஒரு விஷயம் புரியணும்.அவனுக்கு இன்ஜினியரிங் படிக்க விருப்பமா என்றே நீ அவனிடம் கேட்கவில்லை.அப்படி இருக்கையில் அதில் ஒரு பிரிவை தேர்ந்தெடுக்க சொல்லி நீ அவனை காட்டயபடுத்த கூடாது.சங்கர் ! உனக்கு என்ன படிக்க விருப்பம் சொல்லு.?"

முருகையா இப்படி பேசியதும் அவனால் ஒன்றும் பேசமுடியாமல் மவுனமாக நின்றான்.சங்கர் அப்பாவின் முகத்தையும் தாத்தாவின் முகத்தையும் மாறி மாறி பார்த்தான்.இப்பவும் அவனுக்கு ஏதும் பேச தோன்றவில்லை.தனது விருப்பத்தை சொன்னால் அப்பா என்ன சொல்வாரோ என நினைத்து மவுனமாகவே நின்றான்.

முருகையா மகனை பார்த்து சொன்னார்."நீ இவ்வளவு தூரம் மெனக்கடறது எனக்கு புரியுது.இதெல்லாம் எதற்காக செய்கிறாய் சொல்லு? ".

"வேறு எதற்கு, அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான்."

"அவன் வாழ்க்கை நல்லா இருக்கிறதற்கு இன்ஜினியரிங் படிக்கணும்னு நீ நினைக்கிறாயா?"
"ஆமா"

"இன்ஜினியர் ஆவதற்கு அந்த கல்வி தேவை.வாழ்க்கை நல்லா இருக்க தேவை இல்லை."
அவனுக்கும் புரியவில்லை.சங்கருக்கும் புரியவில்லை. அவரை ஏறிட்டு பார்த்தார்கள்.

"புரியலையா ? வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஏதோ ஒரு துறையில் காலடி எடுத்து வைக்க தான் இந்த கல்வி தகுதி தேவை.அது கூட இன்றைய உலகில் போட்டி அதிகமாக இருப்பதால் தான் தேவை படுகிறது.அதாவது நீ அடுத்தவனை விட ஏதோ ஒரு வகையில் மேலானவன் என்று காண்பிக்க தேவைப்படுகிறது. ஒரு துறையில் நுழைந்த பின் முன்னேறுவதற்கு இதெல்லாம் தேவை இல்லை.இந்த கல்வி அப்போது பயன்படாது.தொழில் கல்விகளிலயே ஒருவன் படித்த கல்வி அறிவு வெறும் 2 முதல் 7 விழுக்காடு வரை தான் நிஜ வாழ்க்கையில் பயன்படுகிறது.அவன் கல்லாதது தான் வாழ்க்கையில் நிறைய இருக்கிறது.அந்த கல்வி தான் அவனுக்கு வாழ்க்கையில் வெற்றி தேடி தரும். அப்படி இருக்கையில் அவனுக்கு பிடித்த துறையில் வாழ்க்கை அமைந்தால் தான் அந்த புற கல்வி அவனுக்கு கிடைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.வாழ்க்கையில் வெற்றி பெற தேவை வெறும் common sense தான்."

சங்கரும் அவனும் மௌனமாகவே இருந்தார்கள். மாமா இப்படியெல்லாம் பேசமாட்டாரே, என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் மனைவி மூவரையும் பார்த்து கொண்டிருந்தாள்.
"நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்றீங்க?"

"எல்லா துறைகளிலும் இருக்கிற படிப்புகளை பற்றி அவனிடம் ஒரு பட்டியல் கொடு.ஒவ்வொன்றும் எதை பற்றிய கல்வி என்று அவனுக்கு விளக்கு.அதில் உள்ள சாதக பாதகங்களை அவனுக்கு புரியும்படி சொல்.அடுத்த பத்தாண்டுகளில் அல்லது பதினைந்து ஆண்டுகளில் அவன் அந்த துறையில் எங்கு செல்ல முடியும் என்பவை போன்றவைகளை சொல்லு.அந்த துறையின் உச்ச நிலை என்ன என்பதை விளக்கு.ஒவ்வொரு துறையிலும் உள்ள peaks and valleys பற்றி அவனிடம் சொல்லு.அதற்க்கு பின் அவனாக ஒரு துறையை தேர்ந்தெடுக்கட்டும்.இதற்கு பெயர் தான் career guidance."

"அதை தான் நான் செய்கிறேன்" என்றான் அவன்.

"இல்லை. நீயாக அவனை இன்ஜினியரிங் படிக்க சொல்கிறாய். நீயாக மூணு துறையை வேறு தேர்ந்தெடுக்கிறாய். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்லி அவனை நிர்பந்தம் செய்கிறாய்.உன் விருப்பத்தை அவன் மேல் திணிக்காதே. நல்லா நினைவில் வைத்து கொள்.அவன் விருப்பத்திற்க்கு மாறாக உன்னால் தேர்ந்தெடுக்கப்படும் எந்த துறையும் அவன் வாழ்க்கையை மேம்படுத்தாது. அவனுக்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோள், I mean a goal in life தேவை. அதற்கு வழிகாட்டு. அந்த குறிக்கோளை நோக்கி அவன் focused ஆக செயல்படணும்.That will make him successful in life."

முருகையா,"சும்மா சொல்லு சங்கர். உன் வாழ்க்கையை நீ தான் முடிவு செய்யவேண்டும்.என்ன படிக்க போறே?"

சற்று தயங்கி சங்கர், "எனக்கு Mass communication படிக்க விருப்பம்" என்றான் .

"என்னது ? அப்ப இன்ஜினியரிங் படிக்கலையா?' சீறினான் அவன்

சற்று துணிவுடன் சங்கர் "இல்லை" என்றான்.

"அப்பவே சொல்லி தொலைக்க வேண்டியது தானே? என்கிட்டயே communicate பண்ண தெரியலை.நீ எல்லாம் Mass communication படிச்சு என்ன கிழிக்க போறே.?" மகன் இன்ஜினியரிங் படிக்க விருப்பம் இல்லை என்று சொன்ன ஆதங்கத்தில் அவன் புலம்பினான்.

முருகையா மகனை சிறிது நேரம் உற்று நோக்கினார். அவன் மிகவும் நொந்து போய் இருப்பது போல் அவருக்கு தோன்றியது.

"நீ கொஞ்சம் அமைதியாக இரு.You must remember he is just 17 years old." என்றார் மகனை பார்த்து.

சங்கர் பெருமூச்சு விடும் சத்தம் கேட்டது.கண்களின் ஓரத்தில் நீர் துளிகள் தெரிந்தது.முருகையா சற்று நேரம் மகனையும் பேரனையும் உற்று நோக்கினார்.பின்பு பேரனை அழைத்து பக்கத்தில் உட்கார சொன்னார்.சங்கர் அமர்ந்ததும் அவன் தோளில் ஒரு கை வைத்து கொண்டே அவனை பார்த்து சொன்னார்." உனக்கு என்ன விருப்பமோ அதை படி.ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்து கொள்.அந்த துறையில் நீ தான் சிறந்தவனாக இருக்கணும். அதற்கு இந்த ஏட்டு கல்வி மட்டும் உனக்கு உதவாது. வாழ்க்கையை தேடி கண்டு பிடி. அந்த தேடல் தான் உனக்கு வெற்றியை தேடி தரும். நீ வாழ்க்கையில் வெற்றி பெற தான் உன் அப்பா இதையெல்லாம் செய்கிறான்.வெற்றி பெற்று காட்டு.எந்த துறையாக இருந்தால் என்ன வெற்றி வெற்றி தானே."

"சரி தாத்தா." மெதுவாக அப்பாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான் சங்கர்.அவன் இன்னும் கோபம் தணியாமல் இருப்பது புரிந்தது.

"இன்னொன்று சங்கர்,வாழ்க்கையை பின்னால் திரும்பி பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.ஆனால் வாழ்வதற்கு முன்னால் பார்த்து தான் ஆக வேண்டும்." சங்கருக்கு புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது.எழ முயன்ற சங்கரை தோளை அழுத்தி உட்கார வைத்தார். அவர் இன்னும் முடிக்கவில்லை போலும்.

"வாழ்க்கை என்பது ஒரு கட்டிடம் போல .மெதுவாக தான் உயரும். நமது தினசரி அனுபவங்கள் தான் அந்த கட்டிடத்தை உயர்த்தும். நமது அனுபவங்கள்,இன்னொருவரின் வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்பு, நம்மை கவரும் மனிதர்கள், நம்மை கவரும் அனுபவங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், நாம் படிப்பது, நாம் பார்ப்பது, நமது உரையாடல்கள், பிறர் நம்முடன் உரையாடுவது, நமது செயல்கள், மற்றவர்களில் அது ஏற்படுத்தும் தாக்கம்,பாதிப்புகள்,இவையெல்லாம் தான் அந்த கட்டிடத்தை சிறிது சிறிதாக உயர்த்த உதவுகிற விஷயங்கள்.The whole world is there for you to see,read and learn.When you learn more and more you will learn that you have learnt only less and less."

சங்கர் மெதுவாக அப்பாவின் முகத்தை பார்த்தான்.சற்று அமைதி திரும்பியது போல தெரிந்தது.

"சரி தாத்தா.நாளைக்கே நான் Mass communication course பற்றி விசாரித்து வருகிறேன் "என்றான் சங்கர் உற்சாகத்துடன். மகனின் உற்சாகம் அவனுக்கு வியப்பை அளித்தது.

முருகையா,"இரு சங்கர். இன்னும் வேறு என்னவெல்லாம் options உள்ளது என்றும் தெரிந்து கொள்.அதன் பின் நன்றாக யோசித்து இரண்டு அல்லது மூணு பிரிவுகளை தேர்வு செய்துகொள்.அப்பாவிடம் ஆலோசனை கேள்.பின்பு நீ இறுதி முடிவு செய்.ஆனால் முடிவு உன்னுடையதாக தான் இருக்க வேண்டும்.Best of luck " என்றார்.

அவன் அப்பாவை பெருமிதத்துடன் பார்த்தான்.அவனும் ஏதோ கற்று கொண்டதை போல உணர்ந்தான்.






சனி, 3 ஜனவரி, 2009

ரிஷிமூலம்

தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தேன்.தவணை முறையில் வீட்டு பொருட்கள் விற்கும் 'குமார் ஃபேமலி ஏய்டு கார்பரேஷன்' விளம்பரம் ஓடிகொண்டிருந்தது. தூத்துக்குடியில் நான் படித்த போது என்னுடன் படித்த நண்பனின் நிறுவனம் தான் அது.படிக்கும் போது அவன் அண்ணன் அதை நிர்வகித்து வந்தார்.இப்போது என் நண்பன் தான் அந்த நிறுவனத்தை நடத்துகிறான்.என் மனைவியை அழைத்து இந்த விஷயத்தை சொன்னேன்.

"அதென்ன டீவியில் வரும் விளம்பரங்களை எல்லாம் பார்த்து உங்களுக்கு தெரிஞ்சவர் என்று சொல்றீங்க!"


தங்க நகைக்கு கடன் கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரம் போன வாரம் வந்தது.தென் இந்தியா முழுவதும் நான்கு மாநிலத்திலும் சேர்த்து அவர்களுக்கு 700 கிளைகளுக்கு மேல் இருக்கிறது.திருவனந்தபுரத்தில் நான் படித்த போது என் வகுப்பு தோழனாக இருந்தவனுக்கு சொந்தமான நிறுவனம் தான் அது.அப்போது அவனது தந்தை தான் நிர்வகித்து வந்தார்.அவனது தாத்தா காலத்தில் இருந்து உள்ள குடும்ப நிறுவனம் அது.ஆனால் அப்போது அது கேரள மாநிலத்தில் மட்டுமே நடத்தி வந்த ஒரு சீட்டு கம்பனியாக மட்டுமே இருந்தது.எனது நண்பன் பொறுப்புக்கு வந்த பின்பு ஆல விருட்சம் போல வளர்ந்து விரிந்து இன்று தென் இந்தியா முழுதும் கிளைகள் உள்ள ஒரு பெரிய நிறுவனமாக உள்ளது.நான் அவனை அதற்க்கு பின் பார்த்தது கிடையாது.இருந்தாலும் அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு இணையதளத்தில் பார்த்த போது நிர்வாக இயக்குனர் என்று என் நண்பனின் புகைப்படம் இருப்பதை பார்த்து உறுதி செய்து கொண்டேன்.இந்த விஷயத்தை என் மனைவியிடம் கூறியிருந்தேன்.

"உங்களுடன் படித்தவர்கள் எல்லாம் பெரிய நிறுவன முதலாளிகளாக இருக்கிறார்களே"

"ஆமாம் அவர்கள் எல்லாம் பிறக்கும் பொழுதே சீமான்கள் ."


"சரி அதை விடுங்க.நாளை திருச்செந்தூர் போகலாமா? ரெம்ப நாளா சொல்லிகிட்டு இருக்கிறேனே?"

"நாளைக்கா! லீவு எடுக்க முடியாதே, அது போக கோமு காலேஜு போகணும்ல?"

"அவ வரலை என்று சொல்லிவிட்டாள்,நாம போகலாம்"


"அப்படியா! நான் வேணும்னா ஒண்ணு செய்யுறேன்.அரை நாள் லீவு போடுறேன்.ரெண்டு மணிக்கு வரேன். ரெடியா இரு.நான் வந்த உடனே போகலாம்."

வீட்டிலிருந்து கைபேசியில் அழைத்து ஞாபகபடுத்திய உடன் மானேஜரிடம் சொல்லிவிட்டு வங்கியை விட்டு புறப்பட்டேன்.பெருமாள்புரத்தில் இருக்கும் என் வீட்டிற்கு வந்து சேர மணி மூன்று ஆகிவிட்டது.

"ரெண்டு மணிக்கு வர ஆளா நீங்க! நான் ரெடியா இருக்கிறேன்."


"அஞ்சே நிமிஷத்தில் கிளம்பிடலாம்." முகத்தை மட்டும் அலம்பி சற்று பவுடர் பூசிக்கொண்டு உடனே கிளம்பினோம்.புது பேரூந்து நிலையத்தில் இருந்து 3.40 க்கு கிளம்பும் பஸ்சில் இடம் கிடைத்தது.

"நாலே முக்கால்,அஞ்சு மணி ஆகிவிடும்,நாம் அங்கு போய் சேர"


"செய்துங்கநல்லூர்,ஆழ்வார்திருநகர்,திருச்செந்தூர் மட்டும் ஏறுங்க.வேறு எங்கும் நிக்காது.வேறு டிக்கட்டு ஏதும் இருந்தால் தயவு செய்து இறங்கிடுங்க"

"ஸ்ரீவைகுண்டம் நிக்காதா?"

"நிக்காது.அதானம்மா சொல்றேன்."


வேகமாக ஒரு பெண் கை குழந்தையுடன் பேரூந்தை விட்டு இறங்கினாள்.அவள் இறங்கும்போது ஒரு சந்நியாசி வந்து ஏறினார்.காவி உடை, முடி வளர்த்து முதுகு வரை விரித்து விட்டு, மேல் வயிறு வரை நீண்ட தாடியுடன்,தீட்சண்யமான கண்களுடன் இருந்தார்.

"எங்கே சாமி?"

"திருச்செந்தூர்"

"உட்காருங்க சாமி"


நாங்கள் இருந்த இருக்கைக்கு இரண்டு வரிசை முன்னால் உள்ள சீட்டில் அமர்ந்தார். ஏற்கனவே அங்கு இன்னும் இருவர் இருந்தனர். சற்று நகர்ந்து சாமியார் அமர இடம் கொடுத்தனர். பஸ் கிளம்பியதும் நல்ல காற்று வீச ஆரம்பித்தது. லேசாக கண் சொக்க ஆரம்பித்தது. தூங்க கூடாது என்று முடிவு செய்தேன். பொழுது போக பஸ்சில் இருந்தவர்களை எல்லாம் அப்படியே ஒரு பார்வை பார்த்தேன். சந்நியாசி இருந்த இருக்கை வந்த உடன் கண்கள் குத்திட்டு நின்றது. காரணம் சாமியார் தலையை லேசாக ஒருக்களித்து சாய்த்து,கைகளால் தலை முடியை கோதிவிட்டு,கழுத்தை வலது புறம் இருந்து இடது புறமாக சுழற்றினார். இது போன்று செய்பவர் யாரையோ எனக்கு தெரியுமே!யோசித்து பார்த்தேன்.புலப்படவேயில்லை.ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை சாமியார் இது போல செய்து கொண்டே இருந்தார். சந்தேகமே இல்லை .எனக்கு தெரிந்த யாரோ ஒரு நபர் இது போல செய்வார்.எவ்வளவவு யோசித்தும் யாரென்று நினைவுக்கு வரவில்லை.

"அந்த சாமியார் அநேகமாக எனக்கு தெரிந்த நபராக இருப்பார் என்று நினைக்கிறேன்." என் மனைவி என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

"ஏன் அவரும் உங்களுடன் படித்தவரா?" கிண்டல் தொனிக்க கேட்டாள்.

"தெரியலை.இருக்கலாம்.அவர் முகத்தை நன்றாக பார்த்தால் தெரிந்துவிடும்."


எவ்வளவோ முயற்சித்தும் அவர் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை.ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கழுத்தை சுழற்றி கொண்டே இருந்தார்.அவரின் இந்த செய்கை என் ஆவலை மேலும் கூட்டியது.திருசெந்தூரில் இறங்கியதும் எப்படியாவது அவரின் முகத்தை உற்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.பஸ்சில் கந்த ஷஷ்டி கவசம் ஒலி பரப்பினார்கள். சாமியாரின் தலை ஆட்டல் பாடலுக்கு ஏற்ப தாளம் இடுவது போல இருந்தது எனக்குள் சிரிப்பை வரவழைத்தது.


5 மணியளவில் திருச்செந்தூர் வந்ததும் வேகமாக சென்று சாமியாரின் முகத்தை பார்த்து விடவேண்டும் என்று முயற்சித்தேன்.அதற்குள் அவர் இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டார். பார்க்க முடியவில்லை.வேகமாக நடந்து அவரை எட்டி பிடித்து பார்த்து விட வேண்டும் என்று பார்த்தால், என் மனைவியால் அந்த வேகத்தில் நடக்க முடியாது என்பதால் முயற்சியை கை விட்டேன்.

"அவர் யாராக  இருந்தால் நமக்கென்ன,நாம வந்த வேலையை முடித்து விட்டு சீக்கிரம் ஊர் போய் சேருகிற வழியை பார்போம்"


தரிசன டிக்கட்டு வாங்கி விட்டு, சட்டையை கழற்றி இடுப்பில் கட்டி கொண்டு வரிசையில் நிற்கும் பொழுது அதே சாமியார் இன்னொரு சாமியாருடன் வேகமாக எங்களை கடந்து போய் கொண்டிருந்தார்.நடந்து போகும் போதும் அதே போல கழுத்தை சுழற்றிய படியே நடந்தார். செந்தில் ஆண்டவனை தரிசித்து விட்டு, சிறிது நேரம் கடல் காற்றை வாங்கி ரசித்து விட்டு, நாழி கிணறு போகும் பாதைக்கு சற்று முன்பு இருக்கும் செருப்பு டோக்கன் கொடுக்கும் இடத்தில் நிற்கும் போது,மீண்டும் சாமியார் எங்களை தாண்டி சென்றார். இந்த முறை அவர் என்னை உற்று நோக்கினார். மிகவும் பரிச்சயமான் முகம் போல தோன்றியது. ஆனால் யாரென்று சட்டென்று கணிக்க முடியவில்லை.

கோவில் கடை வாசலில் ஏதோ வங்க வேண்டும் என்று என் மனைவி சென்ற சமயம் நான் சற்று தள்ளி ஒரு இடத்தில் அமர்ந்தேன்.தற்செயலாக திரும்பி பார்த்தால் சாமியார் சற்று தள்ளி கண் மூடி தியான நிலையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன்.கண் மூடியிருந்த அந்த நிலையிலும் அந்த மேனரிசத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.அப்படி அவர் தலை முடியை கோதும் போது நெற்றியில் வலது ஓரமாக ஒரு சிறு கோடு போல ஒரு தழும்பு தெரிந்தது.உடனே எனக்கு ஒரு பொறி தட்டியது.என்னுடன் படித்த களக்காடு சிவஞானம் போல உள்ளாரே இந்த சாமியார். ஆனால் சிவஞானத்திற்கு நெற்றி தழும்பு இன்னும் சற்று தடிப்பாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் தழும்பு இருக்கும் இடம் ஏறக்குறைய சரியாக தான் உள்ளது. முக்கியமாக சிவஞானம் கிட்டத்தட்ட இதே போல ஒரு மேனரிசம் செய்வான். ஆனால் சிவஞானத்தை என்னால் சாமியாராக எண்ணி பார்க்க முடியவில்லை. கல்லூரி நாட்களில் அவன் ஒரு ஜாலி பேர்வழி. அவனை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருக்கும்.அவன் சொல்லும் காதல் கதைகளை ரசிக்க நண்பர்கள் கூட்டம் எப்போதும் அவனை மொய்ப்பதுண்டு.அவன் செய்யாத அட்டூழியம் ஏதுமில்லை என்றே சொல்லலாம்.அவன் சொல்வதில் உண்மை எவ்வளவவு என்று அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.ஒரு சமயம் அவன் செய்த குறும்புக்கு பரிசாக ஏதோ ஒரு கும்பல் கொடுத்த பரிசு தான் அந்த நெற்றி தழும்பு.சிவஞானத்தை சாமியாராக கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.இருந்தாலும் அவனுக்கும் சாமியாருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருப்பதால் சாமியார் சிவஞானமாக கூட இருக்கலாம். இருந்தாலும் இந்த மாற்றம் அவனிடம் ஏற்பட என்ன நடந்திருக்கலாம்? இப்படியெல்லாம். நினைத்து கொண்டே நான் சாமியார் முன் சென்று நின்றேன். எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. கண் விழித்து என்னை பார்த்தார்.என்ன வேண்டும் என்பது போல உற்று நோக்கினார்.அவருக்கு என்னை தெரியவில்லை.மீண்டும் புருவத்தை சுருக்கி என்னை பார்த்துவிட்டு கண்களாலயே என்ன வேண்டும் என்று கேட்டார்.

"சாமி நான் ஓன்று கேட்டால் தவறாக நினைக்க மாடீங்களே?" கேள் என்பது போல தலையை அசைத்தார்.

"பூர்வாசிரமத்தில் உங்கள் பெயர் சிவஞானமா?" என் கண்களை உற்று நோக்கினார்.என்வழுக்கை தலை என்னை அடையாளம் காட்டியிருக்க வாய்ப்பில்லை.

"ரிஷிமூலம் பார்க்காதே.நான் சிவானந்தா"

"Every saint has a past " என்று ஆங்கிலத்தில் வேறு சொன்னார்.

கிட்டத்தட்ட சிவஞானம் தான் சாமியார் என்று நான் நினைத்தாலும் சாமியார் பிடி குடுக்கமலயே தான் பேசினார். சாமியார் ஆங்கிலத்தில் பேசியதும்,சிவஞானம் ஆங்கில ட்யுஷன் படிக்க சென்ற கதை என் நினைவுக்கு வந்தது.அந்த ஆங்கில பேராசிரியர் பக்கத்து மாநிலத்துக்காரர். அவர் மனைவி மிகவும் அழகாக இருப்பார்.அதற்காகவே ஆங்கில ட்யுஷன் கற்க சென்றவன் தான் சிவஞானம்.ட்யுஷன் சென்று வந்த பின்பு அவன் கூறும் கதைகளை கேட்க ஒரு சிறு கூட்டம் அவன் பின்னால் செல்லும்.

மீண்டும் என்னை உற்று பார்த்துவிட்டு எனக்கு விபூதி அளித்து "திருச்சிற்றம்பலம்" என்றார்.எனக்கு விபூதி அளிப்பதை பார்த்து குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த ஒருவர் சாமியாரிடம் திருநீறு வாங்க கை நீட்டினார்.அவருக்கும் விபூதி அளித்தார்.

"சாமி எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துகொண்டே இருக்கிறது.மன அமைதியே இல்லை " என்று சொன்னார்.அப்படி அவர் சொன்ன உடன் அவர் மனைவியின் முகம் சுருங்கியது.அதை கேட்ட உடன் சாமியார் வாய் விட்டு பலமாக சிரித்தார்.

பின்பு அந்த நபரை பார்த்து சொன்னார்

"சீறும் வினையது பெண்ணுருவாகி திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியுமாகி கொடுமையினால்
மீறுமலமு முதிரமும் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறும் கரைகண்டலேன் இறைவா கச்சியேகம்பனே"

அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே என் மனைவி என்னை தேடி அங்கு வந்துவிட்டாள்.எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.பரவாயில்லை சிவஞானம் என்னவோ தத்துவமெல்லாம் சொல்லுகிறானே என்று நினைதேன்.

"இந்த சாமியார் எதற்கு அவரிடத்தில் பட்டினத்தார் பாடலை சொல்கிறார்?"

"அது பட்டினத்தார் பாடலா?"

" ஆமாம் .அவரது பாடல்கள் எல்லாம் பெண்களை குறை கூறுவது போல தான் இருக்கும்"


என் மனைவி தமிழ் முதுகலை பட்டதாரி. அவள் சொன்னால் சரியாக தானிருக்கும்.பெண்களால் ஏதோ நடந்து விரக்தி அடைந்து பட்டினத்தார் பாடலகள் பாடுகிறானோ? யாருக்கு தெரியும்! ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

"நம்முடன் பஸ்சில் வந்தாரே அந்த சாமியார் என் வகுப்பு தோழன் சிவஞானம் போல தான் தெரிகிறான்" என் மனைவி என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.

"இனி உங்களுடன் படிக்காதவர் யாரென்று மட்டும் சொல்லுங்கள்"

Every saint has a past என்பதால் தான் பெரியவர்கள் 'நதிமூலம் ரிஷிமூலம்' பார்க்ககூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் போலிருக்கிறது.ஆனால் எனக்கு இன்னொரு விஷயமும் நன்றாக புரிந்தது. Every sinner has a future!.


சனி, 27 டிசம்பர், 2008

பொய்புல்லர்கள்

காலை 11 மணி. வடக்கு வெளி வீதியில் இருசக்கிர வாகனத்தில் போய் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் போன வாகனங்கள் வேகத்தை குறைத்து சிக்னலில் நிற்க நானும் வேகத்தை குறைத்து மெதுவாக நிறுத்தினேன். "மதுரைக்கு போகாதடி" பாடல் அருகில் இருந்த காரில் இருந்து ஒலித்தது. பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்திருந்த கார் அது. "மதுரைக்கு போகாதே" பாடிக்கொண்டே மதுரைக்கு வருவார்கள் போலிருக்கிறது.சிக்னல் விழவும் அப்படியே இடது புறம் திரும்பி மேல மாசி வீதி நோக்கி பயணித்தேன்.மேல மாசி வடக்கு மாசி சந்திப்பில் நேரு ஆலால விநாயகருக்கு அப்படியே வண்டி ஒட்டிகொண்டே ஒரு கும்பிடு போட்டேன். நேருவுக்கும் இந்த கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டு மாசி வீதி சேரும் சந்திப்பில், இந்த சாலயோர விநாயகர் கோவில் அருகில் மேடை போட்டு அரசியல் கூட்டங்கள் நடக்கும்.முன்பு எப்போதோ ஒரு முறை நேரு இங்கு ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவ்வளவு தான் விஷயம். விநாயகருக்கு பெயர் வந்துவிட்டது. அது தான் மதுரை. மேல மாசி வீதியில் சற்று தொலைவில் சிறு கூட்டம் சாலையை மறித்து நிற்பது தெரிந்தது. கூச்சலும் குழப்பமும் தெரிந்தது.முன்னேற முடியாமல் நானும் அங்கு நிறுத்தினேன்.

"படு பாவி இப்படி மோசம் பண்ணிட்டானே, 50,000 ரூபாய் போச்சே"

"அம்மா சும்மா இரு,சத்தம் போடாதே,எல்லோரும் உன்னை கவனிக்கிறாங்க"

"உனக்கென்ன,கஷ்டப்பட்டு சம்பாதிச்சது,இப்படியா போகணும்"

சிறிது தள்ளி இன்னொருவர் எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.

" நீ இப்படி அப்சட் ஆகாதடா,பார், எத்தனை பேர் பாதிக்கபட்டிருக்காங்க"

"ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள்.பணம் கிடைத்துவிடும்"

"கஷ்டப்பட்டு உழைத்த பணம் அப்படி எல்லாம் வீண் போகாது"

"அவன் மட்டும் என் கையில் கிடைச்சா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"

"கிழிச்ச! இப்ப ஆவேசப்பட்டு என்ன செய்ய? விசாரிச்சிருக்கணும்"

"எல்லாம் கோட்டை விட்டாச்சு"

"எதிர் பார்க்கவேயில்லை.நம்புகிற மாதிரியே பேசி கழுத்தை அறுத்திட்டான் "

"போலீசிடம் புகார் கொடுக்கலாமா?"

"அவங்க வேற உயிரை எடுப்பாங்க"

"எப்படியும் கொடுத்து தானே ஆகணும்"

மூடப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தின் முன்பு கூடியிருந்த மக்களின் ஆவேசம் தான் இது.அந்த கட்டிடத்தில் "டிஜி மாஸ்டர்" "க்ளோப் ஆதரைஸடு ட்ரைனிங் சென்டெர்" ஆங்கில பெயர் பலகை இருந்தது.கட்டிடத்தின் மேல் வீட்டிலுள்ளவர்கள் மேலிருந்து வேடிக்கை வேறு பார்த்து கொண்டிருந்தார்கள்.க்ளோப் என்பது உலக அளவில் பெயர் போன கிராபிக்சு மற்றும் அனிமேஷன் மென்பொருள் வெள்யிட்டுள்ள நிறுவனம் என்பது எனக்கு தெரியும்.உபயம் கணினி துறையில் வேலை பார்க்கும் என் மகன்.ஒரு பன்னாட்டு நிறுவனம் இப்படி கூட செய்யுமா? கலி காலம்.எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஆவலை அடக்க முடியாமல் "என்ன சார் விஷயம்?"

" பெரிய நிறுவனத்தின் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி மையம். வேலைக்கு உத்திரவாதம் கூட கொடுத்தார்கள்.சென்னை,பெங்களூரு,புனே,மும்பை போன்ற பெரிய நகரங்களில் வேலை கிடைக்கும்.குறைந்த பட்சம் 15 இல் இருந்து 20 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். கட்டணம் 50,000 ரூபாய் ஒரே தவணையில் கட்டவேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.நம்பி மோசம் போனோம்".

"ஒரே ஒரு வாரம் தான் ஆகியிருக்கும் சார்.வாரத்தில் மூன்று நாள் தான் பயிற்சி .ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தான் வகுப்பு.ஒரு பேட்சுக்கு 20 மாணவர்கள் தான்.காலை 8 முதல் இரவு 8 வரை 6 பேட்சுகள்.இது போல மொத்தம் 12 பேட்சுகள்.ஒரு நபரிடம் 50,000 ரூபாய் வீதம் 120 பேரிடம் வசூலித்து விட்டான் சார்.நாலு நாளைக்கு முன்ன நெட்வொர்க்கு,கம்ப்யூட்டர் எல்லாம் வைரசு அட்டாக் ஆகி சிஸ்டம் கிராஷ் ஆகிவிட்டது. மீண்டும் எல்லா சிஸ்டத்திலும் ஆபரேடிங் சிஸ்டம்,சாப்ட்வேர் எல்லாம் ரீ இன்ஸ்டால் செய்யனும்.அதனால் சென்டருக்கு மூன்று நாள் விடுமுறை என்று சொன்னான் சார்.நம்பினோம்.இப்ப ஊரை விட்டே ஓடிவிட்டான் என்று சொல்கிறார்கள்.கொல்லணும் சார் அவனை"

" நான் க்ளோப் பெங்களூரு ஆபிசுக்கு போன் செய்து கேட்டேன்.எங்களுக்கு அந்த மாதிரி பயிற்சி மையம் எதுவும் மதுரையில் இல்லைன்னு சொன்னார்கள்"

"அதான பார்த்தேன்.பெரிய நிறுவனம் இந்த மாதிரி 420 வேலை எல்லாம் செய்யாது."

ஆவேசத்தின் உச்சியில் இருந்த ஒருவர் ஒரு பெரிய கல்லை எடுத்து கட்டிடத்தை நோக்கி வீசினார்.அவ்வளவு தான் சரமாரியாக கற்கள் பொழிய ஆரம்பித்தது.மேல் வீட்டிலிருந்த பெரியவர் ஒருவர் அங்கிருந்தே உரக்க கத்தினர்

" எறியாதீர்கள்.கடை என்னுடையது."

"அவனுக்கும் சேர்த்து எறிடா கல்லை" கீழே இறங்கி வந்து விடுகிறார் பெரியவர்.

"தம்பி உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? கட்டிடத்துக்கு சேதம் 
ஏற்படுத்தாதீங்க.நானும் உங்களை போல பாதிக்கப்பட்டவன் தான்.நானும் ஏமாந்து தான் நிற்கிறேன்."
"சும்மா கதை விடாத.சுளையா அட்வான்சு வாங்கியிருப்ப இல்ல?"

"60,000 தான் வாங்கினேன்"

"அப்புறம் என்ன? ஒரு வாரதிற்க்கே அறுபதினாயிரமா?"

"அந்த பணத்தை எங்களுக்கு பிரித்து கொடு" பெரியவரின் சட்டையை பிடித்து எகிறினான் ஒருவன்.மேலிருந்து "அவரை ஒன்றும் செய்யாதீங்க! மேலுக்கு முடியாதவர் "

"நிலைமை மோசமாகிறது.போலீசுக்கு போன் போடு"

"உள்ளாற இருக்கிற கம்ப்யூட்டர் எல்லாம் வித்து உங்களக்கு சேர வேண்டியதை எடுத்துங்கங்க" இது பெரியவர்.

"அது எந்த மூலைக்கு?"

"அங்க ஒன்னும் இருக்காதுன்னு நினைக்கிறேன்"

"ஏன்?"

"இரண்டு நாளைக்கு முன் நான் இந்த பக்கம் போனேன்.அப்போது சென்டரில் இருந்து கம்ப்யுடர்களை ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்தான்.சீக்கிரம் வேலை முடிப்பதற்காக இரண்டு இடத்தில் வைத்து ரீ இன்ஸ்டால் செய்வதாக சொன்னான்.ஹார்டுவேர் இன்ஜினீயர் இடத்துக்கு போவதாக சொன்னான்.நாளை மறுநாள் மறக்காமல் வகுப்புக்கு வர வேறு சொன்னான்"
என்னை போலவே ஆர்வத்துடன் இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்தவர் 

"எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க! என்னா டெக்னிக்கு! உக்காந்து யோசிப்பாங்களோ?".

வேறு ஒண்ணுமில்லை.வடிவேலுவின் பாதிப்பு தான்.

போலீசு வேன் சீறி கொண்டு வருகிறது. இன்ஸ்பெக்டரும் போலீசாரும் வேகமாக இறங்குகிறார்கள்."என்ன கலாட்டா இங்க?"

"ஏமாத்திட்டான் சார் .50,000 ரூபாய் சார்.வயிறு எரியுது சார்"

ஒருத்தர் அனைவரின் சார்பில் விளக்கம் அளிக்க "பி 4 வந்து புகார் கொடுங்க"

"இப்ப எல்லோரும் கலைந்து போங்க.அவனை பத்தி எல்லா விவரமும் தெரிந்த ஒருத்தர் ஸ்டேஷன் வந்து புகார் கொடுங்க.பாதிக்கப்பட்ட எல்லோரும் தனி தனியாக புகார் கொடுக்க வேண்டும்.அப்ப தான் எப்.ஐ.ஆர் போட முடியும்.பெரியவரே நீங்களும் வரணும்.வாடகைக்கு விட முன் விசாரிக்கிறது கிடையாதா?"

புலம்பி கொண்டே கூட்டம் கலைய, நானும் வண்டியை கிளப்பினேன்.டவுன் ஹால் ரோடு சந்திப்பு வந்ததும் மீனாக்ஷி அம்மன் கோவில் மேல கோபுரம் தெரிந்தது. வழக்கம் போல வண்டி ஒட்டிகொண்டே அந்த திசை நோக்கி ஒரு கும்பிடு போட்டேன்.வாரியார் சுவாமிகளின் மீனாக்ஷி அந்தாதி வரிகள் தான் என் நினைவுக்கு வந்தது.

" இளம் புதல்வர்கள் துன்பம் களைந்தருள்வாய் மீனாக்ஷயுமயே!
  பொய் புல்லர்கள் செய்யும் இடர் களைவாய் மீனாக்ஷயுமயே"

  அவர்களுக்காக நம்மால் முடிந்தது இது மட்டுமே.